Facebook

Responsive Ads Here

Friday, May 10, 2019

ஆதிச்சநல்லூரில் தற்போது கிடைத்துள்ள ஆதாரங்களைப் பற்றித் தங்களால் விளக்க முடியுமா?




















ஆதிச்சநல்லூர் அகழாய்வு முடிவு – தமிழா இனி தலைநிமிர்ந்து நில் !
தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூரில் அகழாய்வுசெய்து, கண்டெடுக்கப் பெற்ற பொருள்களில் இரண்டு, அமெரிக்க நாட்டில் புளோரிடா மாநிலத்தில் உள்ள ஆய்வகத்திற்கு, கரிம ஆய்வின் மூலம் [CARBON -14. TEST] அகவை [AGE] கண்டுபிடிக்கும் நோக்கத்திற்காக அனுப்பி வைக்கப் பெற்றிருந்தன. ஆய்வு முடிவுகளை மைய அரசின் தொல்லியல் துறையினர், சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளையில் இன்று ஒப்படைத்தனர்.
ஆய்வு முடிவின்படி, ஒரு பொருளின் அகவை கி.மு.905 என்றும், மற்றொரு பொருளின் அகவை கி.மு.791 என்றும் தெரியவந்துள்ளது. அதாவது முறையே கி.மு 10 – ஆம் நூற்றாண்டு மற்றும் கி.மு.8 – ஆம் நூற்றாண்டு ஆகும்.
இதுபற்றி நீதியரசர் குறிப்பிடுகையில், இந்தியாவிலேயே மிகப் பழமையான மொழி “தமிழ்” தான் என்பது உறுதியாகிறது என்று பெருமிதத்துடன் சொல்லியுள்ளார்.
தமிழர்களே! மிகப் பழமையான மொழிக்குச் சொந்தக்காரர்களாக இருக்கும் நாம் இனிமேலாவது நம் தாய்மொழி மீது அக்கறை கொள்வோம் ! தமிழிலேயே பேசுவோம் ! தமிழிலேயே எழுதுவோம் ! தமிழிலேயே சிந்திப்போம் ! குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெயர்களையே சூட்டுவோம் !!
[பின் குறிப்பு:- அகழ்ந்தெடுக்கப் பெற்ற ஒரு பொருள் எத்தனை ஆண்டுகள் பழமையானது என்பதைக் கண்டு பிடிக்க அறிவியல் வல்லுநர்கள் கரிம ஆய்வு முறையைக் கையாளுகின்றனர். அந்தப் பொருளில் இருக்கும் கரிமம்- 14, [CARBON -14] துகளின் அடிப்படையில் அதன் அகவையைக் [AGE] கணிக்கின்றனர். அமெரிக்க நாட்டில் தான் இதற்கான ஆய்வகம் உள்ளது]

 ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு வரலாறு
1876 ஆம் ஆண்டில் ஆதிச்சநல்லூரில் முதலாவது அகழ்வாய்வு நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. ஆதிச்சநால்லூரில் முதன்முதலில் ஜெர்மன் நாட்டைச்செர்ந்த ஜாகோர் 1876ல் அகழாய்வுகள் நடத்தினார். பின்னர் 1896 இலும் 1904 ஆம் ஆண்டிலும் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அக்காலத்தில் ஆய்வுகளை நடத்திய பிரித்தானியத் தொல்லியலாளரான அலெக்சாண்டர் ரெயா [Alexander Rea] என்பவர், தென்னிந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டவற்றுள் மிகவும் பரந்த தொல்லியல் களம் இதுவெனக் குறிப்பிட்டுள்ளார். அப்போது ஆயிரக்கணக்கான தொல் பொருட்களை இவர் கண்டெடுத்து பதிவு செய்துள்ளார். இவற்றுள், மட்பாண்டங்கள், இரும்புக் கருவிகள், ஆயுதங்கள், நகையணிகள் என்பனவும், பொன், வெண்கலம், அரிய கல் முதலியவற்றாலான மணிகளும் (beads), எலும்புகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பண்டைத்தமிழர் நாகரிகத்தின் தொல்பழங்காலத் தொட்டில்ஆதிச்சநல்லூரில் இருந்தது எனத் தொல்லியலாளர்கள் கருதுகிறார்கள்.
2004 ஆம் ஆண்டில் இங்கே நடத்தப்பட்ட ஆய்வுகள் மிகவும் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. 3,800 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடுகளும் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தாழிகள்
ஏறத்தாழ 114 ஏக்கர் பரப்பளவில் நடத்தப்படும் ஆய்வில் ஏராளமான ஈமத்தாழிகள்காணப்பட்டுள்ளன. இக்களத்திலுள்ள புதைகுழித் தொகுதி மூன்று அடுக்குகளாகக் காணப்படுகின்றது. பாறைகள்நிறைந்த மலைச் சரிவுகளில் குழி தோண்டப்பட்டுச் சுட்ட களிமண்ணினால் ஆன தாழிகள் புதைக்கப்பட்டுள்ளன. ஒன்றினால் ஒன்று மூடப்பட்ட இரண்டு தாழிகளைக் கொண்ட புதைகுழிகளும் உள்ளன. பண்டைத் தமிழ்எழுத்துக்களுடன்கூடிய பல தாழிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மற்ற பொருட்கள்
இங்கு கருப்பும் சிவப்பும் கலந்த பானையோடுகள், சிவப்பு, கருப்பு ஆகிய வகைப் பானைகள் கிடைத்துள்ளன. ஒருபானையில் மீது ஒரு பெண்ணுருவம், நெற்கதிர்கள், ஒரு மான் மற்றும் ஒரு பல்லி ஆகியவற்றின் உருவங்கள் ஒட்டுருவமாகக் காணப்படுகின்றன. தங்கத்திலான நெற்றிப்பட்டம், கத்தி மற்றும் வாள் போன்ற இரும்புப் பொருட்கள் மற்றும் வெண்கலப் பொருட்கள் கிடைத்துள்ளன.
தமிழ் எழுத்துக்கள் சர்ச்சை
மேலுள்ள படத்தில் தாழியில் உள்ள கீறல்கள் எழுத்துக்கள் என்று சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதை "கறிஅரவனாதன்" என்று படித்து நச்சுடைய பாம்பை அணிந்த மாலையாக கொண்ட சிவன் என்று பொருள் தருகிறார் நடன காசிநாதன்.
ஆனால் அந்த தாழிகளை அகழாய்வு செய்த சத்திய மூர்த்தி அதை "கதிஅரவனாதன்" என்று படித்து அதற்கு கதிரவன் மகன் ஆதன் என்று பொருள் தருகிறார். ஆனால் அந்த தாழியில் இருப்பது வெறும் சாம்பல் கீறல்களே என்றும் அவை எழுத்துக்கள் அல்ல என்றும் சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
மனித எலும்புக்கூடுகள்
ஆதிச்சநல்லூரில் கிடைத்த மண்டையோடுகளில் ஆய்வாளர்கள் சேட்டர்ஜியும் குப்தாவும் பதிமூன்று எழும்புக்கூடுகளை ஆய்வுக்கு எடுத்து கொண்டு உள்ளனர். அந்த எலும்பு கூடுகளில் எட்டு ஆண்களின் மண்டை ஓடுகளும் ஐந்து பெண்களின் மண்டை ஓடுகளும் அடங்கும். அவற்றில் பெரும்பாலனவை உடைந்தும் சிதைந்தும் உள்ளன.
ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மனிதர்களே தென்னிந்தியாவின் பூர்வக்குடிகள் என்றும் அவர்கள் மத்திய தரை கடல் மக்கள் தென் இந்தியா வரும் முன்னர் இருந்தே தென் இந்தியாவில் வாழ்ந்து வருவதாகவும் கூறுகிறார் ஆய்வாளர் செரோம் சேக்கப்புசன். மேலும் செரோம் ஆதிச்சநல்லூர் எலும்பு கூடுகள் முந்து ஆசுத்திரோலாய்டு எலும்பு கூடுகள் என்றும் அவை மொனாக்கோ பகுதியில் கிடைத்த மேலை பழங்கற்கால ஆரிகனேசியன் பண்பாட்டு பெண்ணின் மண்டை ஓட்டுடன் ஒத்து வருவதாகவும் கூறியுள்ளார்.
மண்டை ஓடுகள்
ஆதிச்சநல்லூரில் கிடைத்த எழும்புக்கூடுகளின் மண்டை ஓடுகளை ஆராய்ந்த சூக்கர்மேனும் சுமித்தும் அவற்றுள் ஒரு மண்டை ஓடு முந்து ஆசுத்திரோலாய்டு மண்டை ஓட்டை ஒத்ததாகவும் மற்றும் ஒரு மண்டை ஓடு மத்திய தரை கடல்மண்டை ஓடு என்றும் கணிக்கின்றனர்.
ஆதிச்சநல்லூரில் கிடைத்த மண்டை ஓடுகளை ஆராய்ந்த ஆய்வாளர்கள் சீவலும் குகாவும் அவை சிந்துசமவெளியின் மொகஞ்சதாரோவில் கிடைத்த முந்து ஆசுத்திரோலாய்டு மண்டை ஓட்டை ஒத்ததாக கூறி உள்ளனர்.
ஆதிச்சநல்லூர் மக்களின் பண்பாடு
ஆதிச்சநல்லூரில் கிடைத்த தொல்லியல் பொருட்களை கொண்டு அங்குள்ள மக்களின் பண்பாட்டை கமில் சுவிலபில் கீழ்வருமாறு வகைப்படுத்துகிறார்.
  1. ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மக்கள் போர் வீரர்களாக இருந்தனர்.
  2. குதிரைகளை பயன்படுத்த கற்றிருந்தனர்.
  3. இரும்பை உருக்கவும் வார்க்கவும் அதை வைத்து போர் கருவிகள் செய்யவும் அவர்களுக்கு தெரிந்திருந்தது.
  4. முருகனை தெய்வமாக வழிபட்டனர். ஆதிச்சநல்லூரில் கிடைத்த சிறிய வேல் முருகு வழிபாட்டின் எச்சம்.
  5. கொற்றவையை போரில் வெற்றி பெறவும் வெற்றியின் கடவுளாகவும் வழிபட்டனர்.
  6. ஆதிச்சநல்லூர் மக்களின் இயலும் இசையும் போரின் வீரச்செயல்களை போற்றிப்பாடும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். போர்ப்பறையை சடங்குகளில் இசையாக வாசித்திருக்க வேண்டும்.
  7. ஆதிச்சநல்லூர் நாகரிகம் ஒரு நெல் நாகரிகம்.
கோட்டைச்சுவர்
ஆதிச்சநல்லூரில் கோட்டைச்சுவர் ஒன்று இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தை சேர்ந்த ஆய்வாளர் சத்தியமூர்த்தியின் மேற்பார்வையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கோட்டைச்சுவர் மக்கள் வாழ்ந்த இடமாகும்.
தமிழ்நாட்டில் கண்டறியப்பட்ட தொல்லியல் களங்களான அமிர்தமங்கலம் போன்ற இடங்கள் இடுகாடுகளை மட்டுமே கொண்டன. ஆனால் ஆதிச்சநல்லூரிலேயே முதன்முதலாக இடுகாட்டையும் சேர்த்து மக்கள் வாழிடமும் கண்டறிப்பட்டது. இந்த மக்கள் வாழிடம் ஆதிச்சநல்லூரின் இடுகாட்டில் இருந்து 100 மீட்டர் தள்ளி வடக்கிலும் வடமேற்கிலும் உள்ள சரிவுகளில் உள்ளது.
ஆய்வாளர் சத்தியமூர்த்தி மக்கள் வாழ்ந்த இந்த கோட்டை குடியிருப்பின் கோட்டைச்சுவர் சீரான வடிவத்தில் இருப்பதையும் அக்கோட்டை குடியிருப்பில் குயவர்களின் சிறு குடியிருப்பையும் கண்டறிந்துள்ளார். மூன்று பானைச்சூளைகளும் பானைகளை சுட்ட சாம்பலும் கரியும் உடைந்த பானையோடுகளும் அக்குடியிருப்பில் உள்ளன. இரும்பு கத்தியும் பாசி மணிகளின் உருவாரங்களும் கார்னேலியன் மணிகளும் கோவக்சு மணிகளும் பெருங்கற்காலக் குறியீடுகளை கொண்ட பானையோடுகளும் எலும்பால் செய்யப்பட்ட கருவிகளும் இக்கோட்டைச்சுவர் இருந்த பகுதிக்குள் கிடைத்துள்ளன. சத்தியமூர்த்தியின் கருத்துப்படி ஆதிச்சநல்லூரின் இடுகாட்டின் காலமான கி.மு. 1000 ஒட்டியே இக்கோட்டை மக்களின் காலமும் இருந்திருக்க வேண்டும் என்கிறார்.
அதிச்சநல்லூர் தொல்பொருட்கள் இருக்கும் அருங்காட்சியகம்
ஆதிச்சநல்லூரில் கிடைத்த பழம்பொருட்கள் பெரும்பாலானவை இந்திய தொல்லியல்துறை கூட்டமைப்பின் அருங்காட்சியகங்களிலும் சென்னை அருங்காட்சியகத்திலும் உள்ளன. அவற்றை அனைத்தையும் ஆதிச்சநல்லூர் அருகிலேயே புதிதாக அருங்காட்சியகம் அமைத்து அதில் வைக்க திட்டங்கள் போடப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment